இன்றைய நிலையில் பணம் சம்பாதிப்பதைவிட ஒருத்தருடைய உடல் ஆரோக்கியமானது சிறப்பாக இருந்தால்தான் மன நிம்மதியுடன் வாழமுடியும். நாம் எதை வேண்டுமானாலும் அடையலாம். ஆனால் ஒருவரின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால் அது பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்கும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் மிக முக்கியமான ஒன்று இதய சம்பந்தப்பட்ட விஷயமாகும். ஒருவருடைய இதய செயல்பாடுகள் சிறப் பாக இருந்தால்தான் அவர்கள் நீண்ட ஆயுளுடன் இருக்கமுடியும். எந்த நேரத்தில் இதயத்தில் பாதிப்பு ஏற்படும் என்பதனை யாராலும் அவ்வளவு எளிதில் யூகிக்க முடியாது.
ஜோதிடரீதியாக இதய சம்பந்தப்பட்ட விஷயத்திற்கு என்ன கிரகங்கள் முக்கிய பங்குவகிக்கிறது. எந்த கிரகங்கள் பலமாக இருந்தால் இதய செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும். நல்லதொரு ஆரோக்கியத்துடன் இருக்கமுடியும் என பார்க்கின்றபொழுது பல்வேறு விஷயங்கள் தெளிவுபடுகிறது. நவகிரகங்களில் தலையாய கிரகம் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன் வலுவாக இருப்பது மிகமிக அவசியமாகும். நவகிரங்களில் தலையாய கிரகமான சூரியன் உஷ்ண கிரகம் என்பதுடன் இவர் இதய சம்பந்தப்பட்ட விஷயத்திற்கு முக்கிய பங்குவகிக்கிறார்.
அதுபோல ஜென்ம லக்னத்திற்கு 4-ஆம் வீடும், 4-ஆம் அதிபதியும், 4-ஆம் வீட்டிலுள்ள கிரகங்களும் இதய சம்பந்தப்பட்ட விஷயத்திற்கு முக்கிய பங்குவகிக்கிறது. ஒருவர் ஜாதகத்தில் சூரியன் ஆட்சி, உச்சம் பெற்றிருந்தாலும் சூரியன் சுப கிரக நட்சத்திரத்தில் இருந்தாலும், தனது நட்பு கிரகம் என சொல்லக்கூடிய குரு, செவ்வாய், சந்திரன் போன்ற கிரக தொடர்போடு இருந்து பலமாக இருந்தாலும் ஜாதகரின் இதய செயல்பாடானது மிகவும் சிறப்பாக இருக்கும்.
ஒருவர் ஜாதகத்தில் சூரியன் நீசம் பெற்றிருந்தாலும், சர்ப்ப கிரகம் என சொல்லக்கூடிய ராகு- கேது சேர்க்கை பெற்றிருந்தாலும், சனி, ராகு- கேது ஆகிய நட்சத்திரங்களில் அமையப்பெற்று சுபகிரக தொடர்போடு இல்லாமல் இருந்தாலும் அவ்வளவு சிறப்பல்ல. அதுபோல 4-ஆம் அதிபதியும் பலவீனமாக இருப்பது, 4-ஆம் அதிபதி பாவ கிரகமான சனி, ராகு- கேது சேர்க்கை அல்லது தொடர்போடு இருப்பது, 4-ஆம் வீட்டில் பாவ கிரகம் இருப்பது, இதய செயல்பாட்டுக்கு அவ்வளவு சிறப்பு அல்ல.
நவகிரகங்களில் சூரியன் இதயத்தில் இருக்கக்கூடிய தசைகளுக்கு காரணம் என்றாலும் ரத்தக் குழாய்க்கு சந்திரன் மிக முக்கிய பங்கு வகிக்கிறார். அதுபோல ரத்த ஓட்டத்திற்கு செவ்வாய் மிக முக்கிய பங்குவகிக்கிறார். சந்திரன், செவ்வாய் பாவ கிரக தொடர்போடு இருந்து 4-ஆம் பாவம் பாதிக்கப்பட்டிருந்தால் இதய சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகிறது. காலபுருஷபடி 4-ஆவது ராசியான கடக ராசியும், நவகிரங்களில் தலையாய கிரகமான சூரியன் வீடான சிம்ம ராசியும் இதய சம்பந்தப்பட்ட விஷயத்திற்கு மிக முக்கிய பங்குவகிக்கிறது.
ஒருவர் ஜாதகத்தில் கடக ராசி, சிம்ம ராசி பாவ கிரகங்களால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் அவர்களுக்கு இதய சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குறிப்பாக சூரியன், சந்திரன், செவ்வாய், 4-ஆம் வீடு, கடக ராசி, சிம்ம ராசி ஆகியவை பாவக்கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சனி, ராகு- கேது போன்ற கிரங்களால் பாதிக்கப்பட்டு இருந்தால் இதய சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகிறது. அதுபோல 4-ஆம் அதிபதியும், சூரியனும் லக்னத்திற்கு 6-ல் பலவீனமாக இருந்தாலும், 6-ஆம் அதிபதியுடன் சேர்ந்து பாவ கிரக தொடர்போடு இருந்தாலும் அவர்களுக்கு இதய சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகிறது.
ஒருவர் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு 4, 5-ல் பாவ கிரகங்கள் அமையப்பெற்று இருந்து 4-ஆம் அதிபதி பாவ கிரகங்களால் பாதிக்கப்பட்டு இருந்து சூரியன் பலவீனமாக இருந்தால் அவர்களுக்கு கண்டிப்பாக இதய சம்பந்தப்பட்ட பாதிப்புகள், இதய கோளாறு ஏற்படுகிறது. அதுபோல பலவீனமான சூரியன், 4-ஆம் அதிபதி, 4-ல் அமையப்பெற்ற பாவ கிரகங்களுடைய தசாபுக்தி நடைபெறுகின்றபொழுது ஒருவரது ஆரோக்கியத்தில் அதிலும் குறிப்பாக இதய சம்பந்தப்பட்ட விஷயத்தில் சற்று எச்சரிக்கையாகவும் கவனத்தோடும் இருப்பது மிகமிக நல்லது.
ஒருவருக்கு சூரியன் மிகமிக பலவீனமாக இருந்தால் அதிலும் குறிப்பாக சூரியன் பலவீனமாக இருந்து சர்ப்ப கிரகமான ராகு- கேது தொடர்போடு இருந்தால் சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, சூரிய நமஸ்காரம் செய்வது, குலதெய்வ வழிபாடு மேற்கொள்வதன் மூலமாகவும், சரியான உடற்பயிற்சிகள் மேற்கொள்வதன் மூலமாகவும் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்துக் கொள்ளமுடியும்.
செல்: 72001 63001